ஜோ பிடனுடன் நடந்த நேரடி விவாதத்தில், இந்தியாவை குற்றஞ்சாட்டிய டிரம்ப்!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவினால் ஏற்பட்ட இறப்புகள் குறித்த முழு விவரத்தை அளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் நேரடி விவாத நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ஜோ பிடன், “அமெரிக்காவில் இதுவரை 74 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிபர் டிரம்ப் பொய்யான தகவல்களை அவிழ்த்து விடுகிறார்” என்று ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, “நீங்கள் கொரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை பற்றிக் கூறுவீர்கள் என்றால், சீனாவில் கொரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று உங்களுக்கு தெரியாது. ரஷ்யாவிலும், இந்தியாவிலும் கொரோனாவுக்கு எத்தனை பேர் இறந்தார்கள் என்று உங்களுக்குத் தெரியாது. இந்த நாடுகள் கொரோனாவினால் ஏற்பட்ட உண்மையான உயிரிழப்புகள் குறித்த தகவலை அளிக்கவில்லை.” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய பிடன் “நாம் கேட்கும் கேள்விகள் எதற்கும் அதிபர் டிரம்ப் நேரடியான, சரியான பதில் கூறமாட்டார், இவர் ஒரு கோமாளி” என்று அதிபர் டிரம்பை விமர்சித்தார்.