இந்திய வெங்காய ஏற்றுமதி தடைக்கு வங்கதேசம் வருத்தம்

இந்தியா, வங்கதேசத்துக்கான வெங்காய ஏற்றுமதியை மீண்டும் துவங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தகவலின்றி வெங்காய ஏற்றுமதி நிறுத்தப்பட்டது தொடர்பாக வங்கதேசம் வருத்தம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன் கூறுகையில், “ முன் தகவலின்றி, திடீரென வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தியுள்ளது. வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவுள்ள தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் முன்னரே தெரிவித்திருக்கலாம். இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் எழுதப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, வெங்காய வினியோகத்தை வங்கதேசத்துக்கு தடையின்றி வழங்க வாக்களிக்கப்பட்டது.
இந்த நிலையில், திடீர் வெங்காய ஏற்றுமதி நிறுத்தத்தால் வருத்தமடைகிறோம். இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் மாதாந்திர 2 லட்சம் டன் வெங்காய தேவையை, இந்தியாவின் ஏற்றுமதியே கணிசமா ஈடு செய்து வந்தது. அதன் கையிருப்பு 5.6 லட்சம் டன்னாக இருக்கிறது. 11,000 டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் அது உள்ளது. வெங்காய தேவைக்காக துருக்கி மற்றும் எகிப்தின் உதவியை வங்கதேசம் நாடியுள்ளது. இதனால், இந்தியாவை மட்டும் சார்ந்திருப்பது தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.