“முதலாளிகளுடன் மட்டுமே ஆலோசித்து வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது!” சோனியா காந்தி!
“மோடி அரசு விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் முதலாளிகளுடன் மட்டுமே ஆலோசித்து வேளாண் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது” என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருவரின் பிறந்தநாளையொட்டி அவர்களது கொள்கைகளை சுட்டிக்காட்டி வீடியோ ஒன்றை சோனியா காந்தி வெளியிட்டார்.
அதில் அவர் பேசியுள்ளதாவது, ”இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்பதை மோடி அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளை ஆலோசிக்காமல் எந்தவொரு வேளாண் சட்டத்தையும் அமல்படுத்தியதில்லை. ஆனால் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் முதலாளிகளுடன் மட்டுமே ஆலோசித்து சட்டங்களை அமல்படுத்துகிறது.
வேளாண சட்டங்களைத் திரும்ப பெறும் வரை விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி அக்டோபர் 3 முதல் 5-ஆம் தேதி வரை ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்” என்று சோனியா காந்தி கூறினார்.