ஜெ., நினைவிடத்திற்கு ரூ.51 கோடி போதவில்லையாம் – கூடுதலாக ரூ.7 கோடி ஒதுக்கீடு

ஜெ.,வின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக்க ஏற்கனவே ரூ.68 கோடி கொடுத்து கையகப்படுத்தியுள்ள தமிழக அரசு, தற்போது மெரினா நினைவிடத்திற்கு கூடுதலாக ரூ.7 கோடியை ஒதுக்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் தமிழகத்தின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. தொடரும் ஊரடங்கினால் வணிக நிறுவனங்கள் சில மணி நேரம் மட்டுமே வியாபாரம் செய்யும் சூழல் உள்ளது. மீறி பத்து நிமிடம் கடை திறந்து வைத்திருந்தாலும் உள்ளாட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து வியாபாரிகள் வயிற்றில் அடிக்கின்றனர்.
அரசு கஜானாவில் நிதியில்லை, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவே தடுமாறுகிறோம் என கூறுகின்றனர். இது மட்டுமின்றி நிதிப் பற்றாக்குறையை காரணமாக வைத்து ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதிக்கும் ஆண்டுக்கு ரூ.2 கோடி மேம்பாட்டு நிதி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இவ்வளவு நிதி நெருக்கடி உள்ள சூழலிலும் ஜெ., போயஸ் கார்டன் இல்லத்தை சமீபத்தில் கோர்டில் ரூ.68 கோடி கொடுத்து கையகப்படுத்தியது அரசு. அதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் மெரினாவில் ஜெ., நினைவிடம் அமைக்க ஏற்கனவே ரூ.50.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த தொகை பணிகளை முடிக்க போதாது என பொதுப் பணித்துறை கூறியுள்ளது. உடனே கூடுதலாக ரூ.7 கோடியை ஜெ., சமாதிக்கு வாரி வழங்கியுள்ளார் முதல்வர் பழனிசாமி.