தமிழக அரசின் திறமையின்மை, செயலின்மை, தெளிவின்மை காரணமாக மாவட்டங்களில் பரவலாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்கப்படுவது இல்லை என்று செய்தி வெளியானது. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் கடன் மற்றும் நகைக் கடன் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்.
இதை பிரதமர் மோடி கேட்கவில்லை. இதனால், மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அரசின் திறமையின்மை, செயலின்மை மற்றும் தெளிவில்லாத கொள்கை காரணமாக நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்றார்.
