மின்சார ரெயிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் கைது..

தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள பணிமனையில் மின்சார ரெயிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், தற்போது செங்கல்பட்டு அடுத்த பரனூரில் வசித்து வருகிறார். இவர், மின்சார ரெயிலில் பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

பல்லாவரத்தில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு உள்ளார். கடந்த 8-ந் தேதி இவர், பல்லாவரத்தில் உள்ள தனது வீட்டை பார்க்க வந்தார். பின்னர் இரவில் பரனூர் செல்வதற்காக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயிலில் ஏறிச்சென்றார்.

அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடிபோதையில் இருந்த அந்த பெண், ரெயிலில் அயர்ந்து தூங்கி விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் பரனூரில் இறங்கவில்லை. அந்த மின்சார ரெயில் செங்கல்பட்டு சென்றுவிட்டு மீண்டும் கடற்கரை ரெயில் நிலையத்துக்கு சென்று, மீண்டும் தாம்பரம் ரெயில்நிலையம் வந்தது. அதுவரை அவர் தூங்கியபடியே இருந்தார்.

தாம்பரத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு ரெயில் நிலையம் அருகே உள்ள பணிமனைக்கு மின்சார ரெயிலை கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. போதையில் தூங்கிய அந்த பெண், நள்ளிரவு 1 மணியளவில் எழுந்து பார்த்தபோது ரெயில் பணிமனையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இரவு நேரம் என்பதால் வெளியே செல்ல பயந்த அந்த பெண், விடியும் வரை ரெயில் பெட்டியிலேயே இருக்க முடிவு செய்து மின்சார ரெயிலிலேயே அமர்ந்து இருந்தார்.

அப்போது ரெயில்களை சுத்தம் செய்ய அங்கு வந்த ரெயில்வே தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர், மின்சார ரெயில் பெட்டியில் தனியாக இருந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டினர்.

பின்னர் அங்கிருந்து தப்பி தாம்பரம் ரெயில் நிலையம் வந்த அந்த பெண், ரெயில்வே போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இதுதொடர்பாக ரெயில்வே தற்காலிக ஊழியர்களான மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த அஜீஸ் (வயது 30), மப்பேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் ரெயில்வே பணிமனையில் மின்சார ரெயிலிலேயே பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x