காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்த ரவுடி – தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே முகம் சிதறி உயிரிழந்தார். சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ரவுடியும் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்தவன் ரவுடி துரைமுத்து. இவன் மீது கொலை வழக்கு, மணல் கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவன் வேறொருவரை கொலை செய்வதற்கு சதி திட்டம் போட்டுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்தது, அவனை கைது செய்வதற்கு போலீஸார் குழுவாக சென்றனர்.
அவனை முறப்பநாடு அருகே காட்டுப்பகுதியில் போலீஸார் சுற்றி வளைத்த போது, தப்பி ஓட முயன்று நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் மீது வீசியுள்ளான். இதில் காவலர் சுப்பிரமணியின் முகம், கைகளில் பட்டு நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவுடி ஒருவன் காவலரை வெடிகுண்டு வீசி படுகொலை செய்த சம்பவம் தமிழகத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது தப்பியோடிய ரவுடி துரைமுத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.