தண்ணீர் குடிக்க வந்து, பரிதாபமாக பலியான 2 யானைகள்!

கர்நாடக வனப்பகுதி தளி அருகே, ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில், இரண்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வனப்பகுதியை ஒட்டி, கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்காவுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் அவ்வப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் தண்ணீர், உணவு தேடி நுழைவது வழக்கம்.

கடந்த 3- ஆம் தேதி, பன்னார்கட்டா பூங்காவுக்கு உட்பட்ட சந்தேகோடள்ளி வனச்சரகம், உனுசனஹள்ளி வனப்பகுதியிலுள்ள சிக்கேனஹள்ளி ஏரியில், இரண்டு யானைகள் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளன. இந்த ஏரியின் நடுவில் உயர் அழுத்த மின்கம்பங்கள் உள்ளன. அதிலிருந்த மின்கம்பி அறுந்து, ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த யானைகள் மீது விழுந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் அந்த இரு யானைகளும் பலியாயின. அவற்றுக்கு 12 முதல் 18 வயதுக்குள் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து தகவலறிந்த சந்தேகோடள்ளி வனச்சரக அலுவலர் பிரசாந்த் மற்றும் வனத்துறையினர், யானைகளின் உடல்களை மீட்டனர். சம்பவ இடத்திலேயே இரு யானைகளுக்கும் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உடற்கூறாய்வு பணிகள் முடிந்த பிறகு ஏரிக்கரை அருகிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கர்நாடகா மாநில வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, தமிழக வனப்பகுதிகளான தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின் கம்பிகள் மிக தாழ்வாக செல்கின்றன. யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் ஏரிகளின் நடுவிலும் உயரழுத்த மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ள வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து நிகழும் அபாயம் உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். நீர்நிலைகள் வழியாக மின் கம்பங்கள் பதிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கியும் விடுத்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x