“உங்களுக்கு கோதுமைக்கும், நெல்லுக்கும் வித்தியாசம் தெரியுமா?” – கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்த அமரீந்தர் சிங்..

விவசாயிகளின் வேலைக்காரன் எனக் கூறும் உங்களுக்கு கோதுமைக்கும், நெல்லுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் இன்று ‘பாரத் பந்த்’ அறிவித்தனர். அதன்படி, நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சருக்கும், டெல்லி முதல்வருக்கும் இடையே புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறுகையில், ‘டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கோதுமைக்கும் நெல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா? மத்திய அரசின் மூன்று சர்ச்சைக்குரிய சட்டங்களை அமல்படுத்துவதை தடுக்க அவர் சட்டசபை மூலம் என்ன நடவடிக்கை எடுத்தார்? எந்த பங்களிப்பையும் செய்யாத அவர், இப்போது தன்னை விவசாயிகளின் வேலைக்காரன் என்று அழைக்கிறார். இது வெறும் விளம்பரமே தவிர வேறில்லை’ என்றார்.
முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டெல்லியின் சிங்கு எல்லைக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர், ‘எங்கள் அரசின் எம்.எல்.ஏக்களும், நானும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளோம். இன்று நான் உங்கள் முன் ஒரு முதலமைச்சராக வரவில்லை. ஒரு சேவையாளனாக வந்துள்ளேன். விவசாயிகளாகிய நீங்கள் எங்களுக்காக 24 மணி நேரமும் கடினமாக உழைக்கிறீர்கள்.
இன்று நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்கள். அதனால் உங்களுடன் நிற்பது எங்கள் அனைவரின் கடமையாகும்’ என்றார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சை தொடர்ந்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமரீந்தர் சிங் கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.