நெய்வேலி சுரங்க மண்ணால் பாழான 150 ஏக்கர் விவசாய நிலம்!!!
கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கன மழையில் சுரங்க மணல் சரிந்து 150 ஏக்கர் விவசாய நிலங்களில் பரவியுள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி சுரங்க மண்ணால் அப்பகுதியில் விவசாயிகள் கடும் இழப்புகளை சந்தித்துள்ளனர். நெய்வேலி, என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், நெய்வேலியில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
இரண்டாம் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் அரசக்குழி, கொம்பாடிக்குப்பம், கொளப்பாக்கம், பொன்னாலகரம் கிராமங்களின் எல்லையோரம் மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றி சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கன மழை காரணமாக , சுரங்க மணல் சரிந்து 150 ஏக்கர் விவசாய நிலங்களில் மணல் படிந்துள்ளது. இதனால் விவசாய பயிர்கள் முற்றிலும் நாசம் அடைந்துள்ளன. சுரங்க மணல் சரியாமல் தடுக்க, தடுப்பு கட்டை மற்றும் வாய்கால் கட்ட கோரிக்கை வைத்தும் பலன் இல்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
‘என்எல்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்த வேண்டும்’ என விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.