தனிச் சின்னத்தில் போட்டியிடவே விரும்பும் திமுக கூட்டணி கட்சிகள்!!

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்திய அரசு மாநில மொழிகளை, தனித்தன்மையை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூர்க்கத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருப்பதாகக் கூறிய வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்றும் திமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்றும் வரும் தேர்தல் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்,
அதேபோல திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது