கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது முகக்கவசத்தை கழற்றிய பின்னர் மக்களிடம் உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா சிகிச்சைக்கு பின்னர் வெள்ளை மாளிகையில், தனது ஆதரவாளர்கள் முன்பாக உரையாற்றியபோது முகக்கவசத்தை அகற்றினார். “முதலில், நான் மிகவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது” என்று ட்ரம்ப் தனது ஆதரவாளர்களிடம் கூறினார். “ட்ரம்ப் சனிக்கிழமையன்று கொரோனா பரிசோதனையை மேற்கொண்டார். அவரால் இனி மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் ஆபத்து இல்லை” என்று அவரது மருத்துவர் சீன் கான்லி கூறியுள்ளார்.
ஏற்கெனவே ட்ரம்பும் அவரது நிர்வாகமும் கொரோனா தொற்றுநோயை கையாண்ட விதம்பற்றிய விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதே போல் வெள்ளை மாளிகையில் முகமூடி அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவற்றிலுள்ள தளர்வான அணுகுமுறை காரணமாக, ட்ரம்பின் நெருங்கிய உதவியாளர்களில் 11 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடனை எதிர்கொள்ளும் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா தொற்று காரணமாக சில நாட்களாக பரப்புரையில் ஈடுபட முடியாமல் இருந்தார். தற்போது பிரச்சாரத்தை தொடங்க ஆர்வத்துடன் உள்ள அவர், புளோரிடா, பென்சிவேனியா, அயோவா என்று தொடர்ச்சியான பிரச்சார திட்டத்தை வைத்துள்ளார். அண்மையில் நடந்த நேர்காணல்களில் தொண்டை அலர்ஜி அறிகுறியின் காரணமாக ட்ரம்ப் வழக்கத்தை விட குறைவான பிரச்சார உரையை நிகழ்த்துகிறார்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 7.7 மில்லியன் மக்களைப் பாதித்துள்ள கொரோனா வைரஸால், இதுவரை 2,13,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
