“பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்!” தமிழக அரசு அறிவிப்பு!

பாலியல் வன்முறை குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நிதி வழங்குவதற்கான புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய திட்டத்தை தொடங்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சமாக 50,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு 4 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக மோசமாக கடுமையான பாலியல் தாக்குதலுக்கு 5 லட்ச ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்முறையால் வாழ்க்கையை இழந்தவர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும், பாலியல் வன்முறையால் ஒருவேளை கர்ப்பமடைந்திருந்தால் 2 லட்ச ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்காக முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.