தனது திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட 6.50 லட்சம் வரியை நீக்க, நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி மனு!!!

கொரோனா பொது முடக்கத்தால் திறக்கவே செய்யாத தனது திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய, நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரை ஆண்டு காலத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த சொத்து வரிக்கு எதிரான இந்த வழக்கு, புதன்கிழமையான இன்று, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வர பட்டியலிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், “ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் மூலம், தனது திருமண மண்டபத்திற்கு தவறாமல் சொத்து வரி செலுத்தி வந்ததாகவும், இந்த வரி கடைசியாக பிப்ரவரி 14-ம் தேதியன்று செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது முடக்கத்தை அறிவித்தன. இதன் விளைவாக, ரஜினிகாந்தின் திருமண மண்டபம், மார்ச் 24-ம் தேதி முதல் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை.
இந்த சூழலில், செப்டம்பர் 10-ஆம் தேதி மாநகராட்சியிடமிருந்து சொத்து வரி ரசீதை பெற்றார். ஏப்ரல் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கு ரூ.6.50 லட்சத்தை சொத்து வரியாக செலுத்துமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு தனது திருமண மண்டபத்தில் அனைத்து முன்பதிவுகளையும் ரத்து செய்ததாகவும், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி பணத்தை திருப்பித் தந்ததாகவும் கூறிய நடிகர் ரஜினி, சொத்து வரி மீதான காலியிட நிவாரணத்திற்கு தனக்கு உரிமை உண்டு.
1919-ஆம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின் பிரிவு 105-ன் படி, 30 நாட்களுக்கு மேலாக வளாகம் காலியாக இருந்தால், வரி நிவாரணம் அளிக்க உதவுகிறது. இது தொடர்பாக செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் இன்றுவரை எந்த பதிலும் இல்லை” என்று தனது ரஜினி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.