“இது பெரியார் மண் என பெருமை பொங்க பேசுகிறோமே.. இதுவா பெரியார் பேசிய சமத்துவம்?” கமல்ஹாசன் கேள்வி!

தேனியில் பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவர் அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேனி கீழவடகரை பகுதியில் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அரசு பிரதிநிதிகள். இவர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்கு துன்புறுத்துவதற்கு தைரியம் எங்கிருந்து வருகிறது? இது பெரியார் மண் என பெருமை பொங்க பேசுகிறோமே ? இதுவா பெரியார் பேசிய சமத்துவம்? ஜாதிகள் இல்லையடி பாப்பா என ஜதியோடு பிள்ளைகளுக்கு பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கிறோமே? ஏன் இத்தனை காட்டுமிராண்டித்தனம் நீடிக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்கள் எந்த வழியாக முன் வரிசைக்கு வந்தாலும் ஜாதி வந்து வழி மறைக்கிறது. ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படும் பதவி கிடைத்தும் அதிகாரம் இருந்தும் ஜாதி என்ற ஒற்றை வார்த்தையில் ஒடுக்கி வைக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் ஜாதியின் பெயரால் நிகழும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதை கண்டும் காணாது இருப்பதும், கள்ள மௌனம் சாதிப்பதும் கண்டிக்கத்தக்கது. சட்டங்களுக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. உங்கள் அதிகார வெறி அரசியலில், ஜாதிய கணக்குகள் மேலோங்கி நிற்பதை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தில் மக்கள் அனைவரும் சமம் எனும் சமத்துவ கனவு நிறைவேற மக்களின் உரிமைகளை மையமாகக் கொண்ட அரசு அமைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x