“இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது” இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை!

எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவோ விஜியான் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இருநாட்டு பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவுகளை ஆர்வத்துடன் செயல்படுத்தவும், பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய செயல்களில் இருந்து விலகி இருக்கவும் இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக அமைத்துள்ளது. அதை சீனா அங்கீகரிக்கவில்லை. அதேபோல, அருணாசலப் பிரதேசத்தையும் சீனா அங்கீகரிக்கவில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா பதிலடி கொடுத்துள்ளார். அவர், “இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடக்கூடாது. ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். இந்த உண்மையை உயர்மட்ட ரீதியில் பல்வேறு நிகழ்வுகளில் சீனாவுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.