கடும் எதிர்ப்புகளையும் தாண்டி,மிகுந்த கட்டுப்படுகளுடன் இன்று நடக்கும் நீட் தேர்வு!!!

சென்னை: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்தியாவில் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் எழுத இருக்கிறார்கள். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தைரியமாக தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்களும் மன நல நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.
நீட் தேர்வை ரத்து செய்யவும் ஒத்திவைக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. எனவே, திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில் நீட் தேர்வு பயத்தால் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கடந்த 9ஆம் தேதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அந்த சோகம் மறைவதற்குள் நேற்று மதுரையில் ஒரு மாணவியும், தர்மபுரியில் ஒரு மாணவரும், திருச்செங்கோட்டில் ஒரு மாணவரும் தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 4 உயிர்களை பலிவாங்கியிருக்கிறது நீட் தேர்வு.
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்களும், மனநல நிபுணர்களும் ஆலோசனையும் அறிவுரையும் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கிளவுஸ், தண்ணீர் பாட்டில், சானிடைசர் என தனித்தனியாக பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்குள் நுழையும் முன்பாக கொடுக்கப்படும் முக கவசத்தை புதிதாக மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களும் அமைக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்போரை தேர்வுப் பணிகளில ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
மாணவர்களும், கண்காணிப்பாளர்களும் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன் உடல்வெப்ப சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு இடையே 6 அடி தூர இடைவெளி இருக்க வேண்டும். தேர்வு முடிந்த பின் மாணவர்கள் ஒவ்வொருவராக மட்டுமே வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்பு மட்டுமே படிப்பு அல்ல என்று கூறியுள்ள கல்வியாளர்கள் மாணவர்கள் தேர்வுகளை தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.