ஹாத்ராஸ் இளம்பெண் கூட்டு பாலியல் கொலையில் கீழ்த்தரமான கதைகளை கட்டும் பாஜக தலைவர்!!

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண் மீது அநாகரிகமான கருத்துகளை தெரிவித்த பாஜக தலைவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தற்போது அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் மாநிலமான உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டு மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் என்பவரின் கருத்து மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இவர் மீது 44 கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பாஜக தலைவர் ரஞ்சித் பகதூர் கூறுகையில், “பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை, குற்றவாளிகளில் ஒருவர் வயலுக்கு அழைத்திருக்கிறார். அந்த குற்றவாளிக்கும், அந்த பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதன் பின் அந்த பெண்ணை மற்ற மூவரும் பிடித்த்துள்ளனர்.
இதுபோன்ற பெண்கள் குறிப்பிட்ட சில இடங்களிலேயே உயிரிழக்கின்றனர். சோளம் திணை, கரும்பு தோட்டங்களிலேயே சடலமாக கண்டெடுக்கப்படுகின்றனர். அவர்கள், நெல் அல்லது கோதுமை வயல்களில், இறந்துக்கிடப்பதில்லை. கரும்பு, சோளம் பயிர்கள் உயரமாக இருக்கும். எனவே ஒரு நபரை எளிதில் மறைத்து விடலாம்.
அந்த பெண்ணிற்கும், குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து அவர்களே அந்த பெண்ணை கொன்றிருக்கலாம். இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள், அந்த பெண்ணை கடத்தியதற்கும் ஆதாரம் இல்லை. அவர்கள், 4 பேரும் அப்பாவிகள் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அவர்களை விரைவில் விடுவிக்கவில்லை என்றால், மன ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளாகிவிடுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக குரல்கள் வந்துள்ள நிலையில். 44 குற்ற வழக்குகளில் தொடர்புள்ள, குற்றவாளியான பாஜக தலைவர் ரஞ்சித் பகதூரின் இந்த உண்மைக்கு புறம்பான இந்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது.