கொடூர ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

- எட்டு போலீசாரை ஏ.கே 47ஆல் சுட்டுக்கொன்றவன் விகாஸ்
- தலைமறைவாக இருந்த விகாஸ் ம.பி.யில் கைதானான்
- விகாஸ் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது கொலை
எட்டு போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான கேங்க்ஸ்டர் ரவுடி விகாஸ் துபேவை, போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, தங்களைப் பிடிக்க வந்த 8 போலீசாரை, ரவுடி விகாஸ் துபே கும்பல், இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டுத்தள்ளியது. இதில் 8 பேரும் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில், விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்து வந்த ரவுடி கும்பல் தலைவர் விகாஸ் துபேயை மத்திய பிரதேசத்தில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எஃப்) போலீசார், அவனை மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு இன்று காலை காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, மழையால் திடீரென சாலை விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட கேங்க்ஸ்டர் ரவுடி விகாஸ் துபே, தப்பியோட முயன்றுள்ளான். இதை போலீசார் தடுத்த நிலையில், அவர்களின் துப்பாக்கியை பறித்து சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ரவுடி விகாஸ் துபே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்தான். காரில் இருந்த 4 போலீசார் காயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கான்பூர் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்