சீன ‘ஏசி, டிவி’க்கு தடை?; மக்களின் பாடு திண்டாட்டம்தான்

சீனாவின், 59 செயலிகளை தடை செய்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக, ‘டிவி, ஏர் கண்டிஷனர்’ உள்ளிட்ட, 12 பொருட்களின் இறக்குமதியை குறைப்பது குறித்த நடவடிக்கையில், அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதனால், கடுமையான விலையுர்வு ஏற்படும் என்பதால், நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்தில், எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடியாக, சீன பொழுதுபோக்கு செயலிகளை இந்தியா தடை செய்தது. இதையடுத்து, தற்போது மத்திய அரசின் கவனம், சீன எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதி பக்கம் திரும்பியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏர் கண்டிஷனர் மற்றும் அதன் பாகங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதன் மூலம், உள்நாட்டில், 1 டஜன் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய திட்டமிட்டு வருகிறது. இதற்காக, வரியை அதிகரிக்கவும், கடும் கட்டுப்பாடுகளை போடவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு, இறக்குமதிக்கு தடைவிதித்தால், ஏற்கனவே துன்பத்தில் இருக்கும் நடுத்தர மக்கள், மேலும் துன்பத்துக்கு ஆளாவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காரணம், ‘இந்திய நாட்டில், ‘அசெம்பிள்’ செய்யப்படும் ஏர் கண்டிஷனரில் பயன்படுத்தப்படும், ‘கம்பரஸர்’களில், 90 சதவீதம், சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி ஆகிறது.
இதை தடைசெய்துவிட்டால், ஏ.சி.யின் விலை தாறுமாறாக கூடும். இனி ஏர் கண்டிஷனர் எட்டாக்கனியாக மாறும் அபாயம் ஏற்படும். மாற்று வழிகளை சிந்திக்காமல் முடிவு எடுப்பது முட்டாள்தனம். ஏற்கனவே அகர்பத்தி, டயர், பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டால், அவற்றின் விலை கூடியிருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களையே பாதிக்கும்.
ஏர் கண்டிஷனர், ‘டிவி’ மட்டுமின்றி, உருக்கு, அலுமினியம், காலணிகள், விளையாட்டு பொருட்கள், லித்தியம் அயான் பேட்டரிகள், விளையாட்டு பொருட்கள் என பல்வேறு பொருட்களின் இறக்குமதி மீதும் வரியை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதெல்லாம் விலையுயர்விலேயே முடியும். நமக்குதான் பாதகம் அதிகம். ’ என்று பொருளாதார நிபுணர்கள் விமர்சித்துள்ளனர்.