திருநெல்வேலியில் காவல்துறைக்கு உளவாளியாக செயல்பட்ட விவசாயி வெட்டிக்கொலை!!
காவல்துறைக்கு உளவாளியாக செயல்பட்ட ஒரு விவசாயியை மர்ம நபர்கள் வெட்டி கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி உடையார்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). விவசாய தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பரமசிவன் அப்பகுதியில் நடைபெறும் மணல் கடத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுத்து, காவல்துறையின் உளவாளியாக செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் உடையார்குளம் பகுதியில் நவராத்திரி திருவிழா நடைபெற்று முடிந்த நிலையில், காளி பூஜை நடந்து உள்ளது.
அந்த பூஜையில் கலந்துகொண்ட பரமசிவன், வீட்டின் பின்பக்கம் கட்டில் போட்டு படுத்து உறங்கினார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவர் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரை சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியாகவே, இதனை அறியாத மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் உறங்கியுள்ளனர். அதிகாலையில் எழுந்த போது விஷயம் தெரியவரவே, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பரமசிவத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.