உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் தனது மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரை ஏமாற்றுவதற்காக, அவர் ஆரம்பத்தில் தனது மகளை கொலை செய்ததாக முன்று பேர் மீது குற்றம் சாட்டியிருந்தார். இதன் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த வழக்கில் புகார் அளித்தவர் இறந்த சிறுமியின் தந்தை அஜய் காதிக். இப்புகாரில் அச்சிறுமியை ஈவ்டீசிங் செய்து மூன்று நபர்கள் கொலை செய்ததாக கூறினார். இதன்பின் உ.பி. காவல்துறை அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் மூன்று பேரையும் கைது செய்தது. ஆனால் விசாரணை அதிகாரிகள், உயிரிழந்த சிறுமியின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அளித்த அறிக்கையில் பல முரண்பாடுகள் இருப்பதை கண்டறிந்தனர். இதன்காரணமாக, இவர்களை மிகவும் கவனமாக கண்காணிக்க ஆரம்பித்தது காவல்துறை. இறுதியில் அஜய் காதிக் காவல்துறையை தவறாக வழிநடத்தியது தெரியவந்தது.
இதன்பின் நடந்த தீவிரமான விசாரணையில் கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரர், தனது தந்தைதான் சகோதரியை சுட்டுக்கொன்றதாக ஒப்புக்கொண்டார். தனது சகோதரி ஆண் நண்பர்களுடன் பழகுவது அவருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார். என்ன நடந்தது என்று போலீசாரிடம் சொல்ல வேண்டாம் என்று அவர் எங்கள் குடும்பத்தினரை அச்சுறுத்தினார் என்றும் அவர் கூறினார்.
தற்போது அஜய் காதிக் குற்றத்தை ஒப்புக்கொண்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. “நான் என் மகள் மீது கோபமடைந்தேன், ஆத்திரத்தில் அவளைக் கொன்றேன். இந்த பழியை மூன்று நபர்களின் மீது போட்டேன். ஏனென்றால் அவர்களது குடும்பங்களுடன் எனக்கு வணிகப் போட்டி உள்ளது,” என்று அவர் கூறினார்.
