“இரண்டு பிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்தோம்” – ரஷிய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம்

தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு பிரான்ஸ் போர் விமானங்களை விரட்டியடித்ததாக ரஷிய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 26 அன்று ரஷ்யாவின் மாநில எல்லையை நெருங்கும் இரண்டு விமான இலக்குகளை ரஷ்ய ரேடார்கள் கண்டறிந்தன. அந்த விமானங்களை தடுத்து நிறுத்துவதற்காக ரஷிய விமான பாதுகாப்பு படைகள் செவ்வாய்க்கிழமை கருங்கடலில் சூ-27 போர் விமானத்தை ஏவின.
அந்த இரண்டு விமானங்களும் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 போர் குண்டுவீச்சு விமானம் என ரஷிய போர் விமானக் குழுவினர் அடையாளம் கண்டனர். பின் ரஷிய விமானம், இரண்டு பிரான்ஸ் விமானங்களுடன் கருங்கடலை கடந்து சென்றது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ரஷிய போர் விமானம் சர்வதேச விதிகளை கடுமையாக பின்பற்றி நடந்தது என்று ரஷிய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் கூறியுள்ளது. பிரான்ஸ் இராணுவ விமானம் ரஷிய எல்லையிலிருந்து விலகிச் சென்றதையடுத்து, சூ-27 தெற்கு இராணுவ விமானநிலையத்திற்கு திரும்பியது என ரஷிய தேசிய பாதுகாப்பு நிர்வாக மையம் தெரிவித்துள்ளது.