ஐபில் 2020:வெற்றிகரமாக டெல்லியிடம் தோற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியான பெங்களூரு…

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. ஜோஷ் பிலிப், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜோஷ் பிலிப் 12 ரன்களிலும், அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 29 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு புறம் சிறப்பாக விளையாடி தேவ்தத் படிக்கல் 50 ஓட்டங்கள் குவித்தார்.

அதிரடி பேட்ஸ்மேன் ஏபி.டி.வில்லியர்ஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஷிகர் தவான் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அவர், 54 ரன்களில் வெளியேற, அடுத்து இறங்கிய அஜிங்கியா ரகானேவும் பொறுப்புடன் ஆடி, 60 ரன்கள் எடுத்து கொடுத்து அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 19 ஒவர்களில் 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேநேரம், தோல்வியடைந்த பெங்களூரு அணியும், ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெறவுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இதில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அல்லது ஏற்கனவே ப்ளே ஆஃப்பிற்கு முன்னேறியுள்ள மும்பை அணி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப்பிற்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x