சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் சாவு தொடர்பாக, எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ. ரகு கணேஷ், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கடைசியாக, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரையும், அவர் காரில் தப்பியோட முயன்றபோது, கங்கைகொண்டானில் வைத்து மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர் பயன்படுத்திய காரையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை தப்பிக்க வைக்க, பா.ஜ.க. பிரமுகர் உதவியது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் அந்த கார் சென்னை முகப்பேரை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர். இதில் அவர் தனது காரை, கடந்த 2017ம் ஆண்டே, கோயம்பேடு பாண்டியன் என்பவருக்கு, வாடகைக்கு கொடுத்துவிட்டதாக கூறினார்.
ஆனால், அவர் சொன்னது முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், அந்த காரின் ஆவணங்களை எடுத்துக்கொண்டு தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் கோயம்பேடு பாண்டியன் குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
