‘பழசே நல்லதானயா இருந்தது?’; தனது சேவைகளின் லோகோக்களை மாற்றி வரும் கூகுள்

சமீபத்தில் தான் கூகுள் அதன் முக்கிய சேவைகளான ஜிமெயில், ட்ரைவ், மீட் உட்பட பல சேவைகளின் லோகோக்களை மாற்றியமைத்தது. இப்போது இந்த சேவைகளைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் புது லோகோவுடன்தான் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொண்டிருப்பர்.
பலரையும் இந்த புதிய லோகோக்கள் ஈர்க்கவில்லை. ‘பழசே நல்லதானயா இருந்தது?’ என்றுதான் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தும் இப்போது அதன் பிரபல பணப் பரிவர்த்தனை சேவையான Gpay-ன் லோகோவையும் மாற்றப்போகிறதாம் கூகுள்.
முக்கிய காரணம், அனைத்து சேவைகளின் லோகோக்களும் ஒரே மாதிரியாக நிறங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூகுள் நினைப்பதுதான். இதனால் பார்த்ததும் ஒரு சேவை கூகுளுடையதுதான் என அடையாளம் கண்டுகொள்ள முடியும் என நம்புகிறது. அதனால்தான் கூகுளின் பிரதான லோகோவின் அதே நிறக்கலவையை (சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம்) கொண்டு புது லோகோக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வரிசையில்தான் இப்போது கூகுள் பே லோகோவும் மாறப்போகிறது. முதல்கட்டமாக சில பயனாளர்களுக்கு மட்டும் Gpay லோகோ ஏற்கெனவே மாறிவிட்டது. சில பயனாளர்களை இதை சமூக வலைதளங்களில் பதிவிடவும் செய்திருக்கின்றனர்.