“முதல்வர், 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் தங்களுடைய வாழ்வுரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு, விவசாயிகள் மற்றும் இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் ஜீவாதார நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவாக அ.தி.மு.க. அரசு கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைக்காதது இதற்கு முக்கிய காரணமாகும்.

மத்திய பா.ஜ.க. அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டது ஐகோர்ட்டின் தீர்ப்பு ரத்தாக காரணம் ஆகிவிட்டது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க. அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு வளர்ச்சி என்ற போர்வையில் விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் தற்போதைக்கு வெற்றி பெற்றிருந்தாலும், இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச் சீட்டு மூலம் நிச்சயம் கற்பிக்கும்.விவசாயிகளின் நலனைத் துச்சமென நினைத்து, ‘கமிஷன்’ என்ற ஒரே நோக்கத்தில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த அராஜகமாக காவல் துறையைப் பயன்படுத்தி, விவசாயிகளின் மீது தடியடி நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இனியேனும் விவசாயிகளின் நலன் காத்திட முன் வருவாரா? விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தவேண்டுமே தவிர, மீண்டும் இந்த திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக்கூடாது. ஆகவே சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடவேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக்கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வரவேண்டும் என்றே விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x