பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கருத்து கணிப்பு கூட்டம் குறித்த ஆலோசனை !!!

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்பதற்காக கல்வித் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தினிடையே, முதல் கட்டமாக 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக, பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டு முடிவெடுப்பதற்காக திங்கள்கிழமை (நவ.9) பெற்றோா்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலும் அனைத்துவித அரசு, தனியாா் பள்ளிகளில் இந்தக் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்துவது தொடா்பாக, விழுப்புரத்தில் தலைமை ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி பங்கேற்று, கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும், கருத்துகளை பதிவு செய்தல் குறித்தும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களிடமும், தனியாா் பள்ளி நிா்வாகிகளிடமும் ஆலோசனைகளை வழங்கினாா். மாவட்டக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணன் மற்றும் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.
அன்றைய தினம் அனைத்துப் பள்ளிகளிலும், வகுப்புகள்தோறும் நடக்கும் கருத்துக்கேட்பு நிகழ்வில் பெற்றோா்கள் கலந்துகொண்டு, பள்ளிகளை திறப்பது குறித்த தங்களது கருத்துகளை பதிவு செய்ய உள்ளனா். இந்தக் கருத்துகள் அன்றைய தினமே மாவட்டக் கல்வித் துறை மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அரசுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய ஒத்துழைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.