‘பெங்களூர்ல இருந்து வந்தா ரூ.5000 அபராதம்!’

கர்நாடக தலைநகர் பெங்களூரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பெங்களூருக்குச் சென்று வந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மண்டியா அருகே உள்ள கிராமங்களில் நூதன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கொரோனாவின் தாக்கம் கடந்த 15 நாட்களாக அதிகரித்து வருகிறது. கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. சென்னையைப் போலவே, பெங்களூரில் வசித்து வந்த வெளிமாவட்ட மக்கள், உயிருக்கு பயந்து சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து வருபவர்களால் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக கருதி, ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் சம்பவங்கள் பல கிராமங்களில் அரங்கேறி வருகிறது.
இதற்கிடையே மண்டியா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், பெங்களூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து யாராவது கிராமங்களுக்கு வந்தால் அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். அதுபோல் கிராமங்களை சேர்ந்த மக்கள் யாராவது பெங்களூருக்குச் சென்று வந்தாலும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை தண்டோரா மூலம் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அறிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களிலும், கன்னட செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.