என்ன டிரம்ப் இதெல்லாம்? கொரோனா பெருகுது.. வளர்ச்சி குறையுது!

அமெரிக்க பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதால் அந்நாட்டின் 5 ஆண்டு வளர்ச்சி முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவிலும் பொருளாதாரம் பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் – ஜூன் கால கட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சரக்குகள் மற்றும் சேவைகள் உற்பத்தி, சுமார் 9.5 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.
மக்கள் செலவினங்களைக் குறைத்தல், வணிக முதலீடுகள் இல்லாமை, உலக பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது. மேலும், இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் வீழ்ச்சி, ஐந்து ஆண்டு கால வளர்ச்சியைத் துடைத்துவிட்டது என வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வீழ்ச்சி 32.9 சதவிகித வருடாந்திர வீழ்ச்சியின் வீதத்திற்கு சமமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே சமயத்தில், ஜனவரி – மார்ச் கால கட்டத்தில் 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும், பொருளாதாரம் ஸ்தம்பித்ததன் காரணமாக கடந்த வாரம் சுமார் 14 லட்சம் பேர், வேலையின்மையால் அரசிடம் நிதி உதவி கோரி விண்ணப்பித்துள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நலத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோன்று, வேலையின்மை உதவித் திட்டத்தின் கீழ் மேலும் 8,30,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், வைரஸ் பரவல் குறைந்தாலும் மீண்டும் பொருளாதாரத்தை மீட்கும் வழிகள் தெரியாமல் நாடுகள் குழம்பிப் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.