தாறுமாறாக உயரும் தங்கம் விலை… காரணம் தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.37,536க்கு விற்பனையாகிறது.
தற்போதைய இக்கட்டான சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதற்குக் காரணம் என்ன… “தங்கத்தை நாம் அமெரிக்க டாலர்களில் வாங்குகிறோம். இந்தியா உற்பத்தியை விட, அதிக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு. கடந்த 2018-2019ஆம் ஆண்டில் 1,664 கிலோ தங்கத்தை மட்டுமே நாம் உற்பத்தி செய்தோம். மேலும் இதே காலகட்டத்தில் அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளோம். இவ்வாறு இறக்குமதி செய்யும்போது இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர்களின் மதிப்பிலேயே தங்கத்தை வாங்குகிறோம்.
ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலர்களின் மதிப்பில் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. கொரோனா காலத்துக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்க உள்ளது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பும் அமெரிக்க டாலர்களின் மதிப்பில் சரிவையே சந்திக்கும்.
எப்போதெல்லாம் இந்திய ரூபாய், அமெரிக்க டாலர்களின் மதிப்பில் சரிவைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை உயரும். அதன்படி பார்க்கும்போது, இனிவரும் நாட்களிலும் தங்கம் விலை கணிசமாக உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது” என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.