“பாஜக கட்சியினர் வேல் யாத்திரை சென்றால் கொரோனா தொற்று பரவாது” எல். முருகன் அபார விளக்கம்!!

“பாஜக கட்சியினர் வேல் யாத்திரை சென்றால் கொரோனா தொற்று பரவாது” எனத் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தீபாவளி பண்டிகையின் காரணமாக தற்காலிகமாக வேல் யாத்திரையை நிறுத்தி வைத்துள்ளோம். எத்தனை தடைகள் வந்தாலும் திட்டமிட்டபடி எதிர்வரும் 17ஆம் தேதி வேல் யாத்திரையைத் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம்.
அந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். வேல் யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ஆம் தேதி கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொள்கிறார். சாலையில் செல்பவர்களைக்கூட முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “முதல்வர் பழனிச்சாமி செல்லும் இடங்களில் கூட அதிக கூட்டம் கூடுகிறது. ஆனால் நாங்கள் கூடினால் மட்டும் எங்கள் மீது வழக்கு, கைது நடவடிக்கை பாய்கிறது. வேல் யாத்திரை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
கொரோனா நேரத்தில் அதிகமான சேவைகளை செய்தது பாஜகதான். அதனால் நாங்கள் வேல் யாத்திரை சென்றால் கொரோனா தொற்று பரவாது. கோவிலுக்கு யாத்திரையாக செல்வது மதம் சார்ந்த நிகழ்ச்சியா?” எனத் தெரிவித்தார்.