தங்க கடத்தல்: கேரள முதல்வரின் முதன்மை செயலர் டிஸ்மிஸ்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதரகத்துக்கு, உணவுப் பொருட்கள் என்ற பெயரில், பார்சல் வருவது வழக்கம். மற்றொரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. ஆனால், இப்படி வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக தகவல் கசிந்தது.
இதை தொடர்ந்து , வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இது போன்ற பார்சல்களை சோதனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றனர். அப்படி, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்ட போது, ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் ஐக்கிய அரபு அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். தங்க கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கு கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளர் வேலை கிடைத்தது எப்படி?என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால்,அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கரை பதவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து முதல்வர உத்தரவிட்டுள்ளார்.