பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிபோட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதுகின்றன…

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லீக் சுற்றுடன் முடித்துக்கொள்ளப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் கராச்சியில் தொடங்கியுள்ளது.
இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முல்தான் சுல்தான்ஸ்- கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த முல்தான் அணி 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய கராச்சி அணியில் பாபர் அசாம் 65 ரன்கள் (53 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். கடைசி கட்டத்தில் தடுமாறிய கராச்சி அணிக்கு இறுதி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. இதில் முதல் 5 பந்தில் ஒரு விக்கெட்டை இழந்து 2 ரன் மட்டுமே எடுத்த நிலையில், கடைசி பந்தில் கராச்சி வீரர் இமாத் வாசிம் பவுண்டரி அடித்தார்.
.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் கராச்சியின் ஸ்கோரும் 8 விக்கெட்டுக்கு 141 ரன்களுடன் நின்றதால் சமன் (டை) ஆனது.
இதன் பின்னர் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கராச்சி அணி 2 விக்கெட்டையும் இழந்து 13 ரன் எடுத்தது. அடுத்து 14 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய முல்தான் அணி 9 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கராச்சி கிங்ஸ் அணி வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இறுதிப்போட்டிக்கான எலிமினேட்டர் 2 சுற்று ஆட்டத்தில் முல்தான் சுல்தான் – லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில், முதலில் பேட் செய்த லாகூர் குவாலண்டர்ஸ் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 46 ரன்களும், தமீம் 30 ரன்களும், சமித் பட்டேல் 26 ரன்களும், ஹபீஸ் 19 ரன்களும் எடுத்தனர்.

இறுதகட்டத்தில் அதிரடி காட்டிய வைஸ் 21 பநதுகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய முல்தான சுல்தான் அணி சாஷீன் 12 ரன்கயிலும், ஷான் மசூத் 27 ரன்களிலும், ரோசோவ் 18 ரன்களிலும், குஷில் ஷா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய தொடக்க வீரர் ஆடம் லத் அரைசதம் அடித்து 50 ரன்களில் வெளியேறினார்.

19.1 ஓவர்களில் முல்தான் சுல்தான் அணி 157 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கராச்சி கிங்ஸ் லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.