மாஸ்க்குக்கு பதில் மலைப்பாம்பை முகத்தில் சுற்றிக்கொண்ட பயணி!

பிரிட்டனில் பேருந்தில் பயணிக்கும்போது முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதில் பயணி ஒருவர் மலைப்பாம்பை முகத்தில் சுற்றி மறைத்துக்கொண்ட சம்பவம், சக பயணிகளை திகிலடைய வைத்தது.
ஸ்விட்டனில் இருந்து மான்சஸ்டர் நோக்கி சென்ற பேருந்தில், பயணி ஒருவர் விசித்திரமான ஒன்றின் மூலம் முகத்தை மறைத்திருந்தார். அது ஏதோ வேடிக்கைக்காக அப்படி மாஸ்க் அணிந்திருக்கிறார் என்று அந்த பயணிகள் நினைத்தனர். ஆனால், உற்று கவனித்ததில், மாஸ்குக்கு பதில் அந்த பயணி பயன்படுத்திய பொருள், உண்மையில் பொருளல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவர், பாம்பை கழுத்தில் சுற்றிக்கொண்டு முகத்தையும் மறைத்திருந்தார்.
மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அந்த பெரியவர் அப்படி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அரசாங்கம் மக்களை மடையர்களாக்கி வருகிறது. மாஸ்க் அணிய வற்புறுத்துவதால் எந்த பயனும் கிடையாது. அதனால் தீமைகள் தான் அதிகம். என்னைப் போன்றவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, அரசு விதிகளை கேலி செய்வதற்காக இப்படி செய்தேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் பயணித்த 46 வயது பெண் ஒருவர் கூறும்போது, “முதலில் நான் அவர் ஒரு வேடிக்கையான மாஸ்க் அணிந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன். பின்பு அந்த பாம்பு அவரது கழுத்திலிருந்து இறங்கி கைப்பிடியில் ஊர்ந்து சென்றபோதுதான் அது பாம்பு என்பதை உறுதி செய்துகொண்டேன்” என்று தெரிவித்தார்.