“டிரம்ப் எங்களுடன் இணைந்து செயல்படாவிட்டால், அமெரிக்காவில் இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கும்” ஜோ பைடன் எச்சரிக்கை!!

டிரம்ப் எங்களுடன் இணைந்து செயல்படாவிட்டால், அமெரிக்காவில் இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர், தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியைத் தழுவினார். அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி மாதத்தில் அதிபராகப் பொறுப்பேற்பார். எனவே அதுவரை அமெரிக்க அதிபராகத் தொடரும், டிரம்ப் எங்களுடன் இணைந்து செயல்படவேண்டும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் இணைந்து செயல்படாவிட்டால், அமெரிக்காவில் இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கும்.
தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், தடுப்பூசி நடைமுறைக்கு வந்துவிட்டால், மக்கள் எவ்வாறு தடுப்பூசியைப் பெறுவார்கள். 30 கோடி அமெரிக்க மக்களுக்கு எவ்வாறு வழங்கப்போகிறீர்கள் என்பது பற்றி திட்டங்கள் எதாவது இருக்கிறதா? அதற்கு அரசு வைத்துள்ள திட்டங்கள் என்ன? மக்களுக்குத் தடுப்பூசி போடுவது என்பது மிகப்பெரிய பணி. உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைத்துத்தான் இந்த பணியை நம்மால் செய்ய முடியும்.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக டிரம்ப், நிர்வாகம் தெரிவிக்கிறது. தடுப்பு மருந்து நமது கைக்கு கிடைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி மக்களுக்கு வழங்கப்போகிறோம். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை காத்திருந்தால், எங்களின் திட்டம் தொடங்கிவிடும். இன்னும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
தற்போதைய சூழல் மிகவும் முக்கியமானது. எங்களிடம் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு எவ்வாறு வழங்குவது, தொழிலாளர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் அனைவருக்கும் எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய செயல்திட்டம் இருக்கிறது. நாங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தாயாராக இருக்கிறோம். நீங்கள் எங்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.