“அமித் ஷாவைக் கண்டு திமுக ஏன் பயப்பட வேண்டும்?” திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கேள்வி!!

“அமித் ஷாவைக் கண்டு அதிமுக அமைச்சர்களே பயப்படுவதில்லை. திமுக ஏன் பயப்பட வேண்டும்” என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இன்று (நவ. 20) சென்னை, அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜன. 5 முதல் பிரச்சாரத்தைத் தொடங்குவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களின் அளித்த பேட்டியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையைப் வருகையைப் பார்த்து அதிமுக அமைச்சர்களே பயப்படவில்லை. நாங்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?
எதற்கு நாங்கள் பாஜக வேல் யாத்திரை பற்றிச் சொல்ல வேண்டும்? எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது, திருச்செந்தூரில் வேல் காணவில்லை என்று சொன்னபோது தலைவர் கருணாநிதி 110 கி.மீ. நடந்தே வேலை கண்டுபிடிக்கச் சென்றார். இப்போது பாஜக தங்கள் கட்சியை வளர்க்கப் புதிதாக வேல் யாத்திரை ஒன்றை நடத்துகிறார்கள். தடை என்று சொல்லியும் அனுமதிப்பது தமிழக அரசு. மத்திய அரசுக்கு பயந்துகொண்டு தமிழக அரசு இப்படிச் செய்கிறது.
காங்கிரஸ் – திமுக உறவு நன்றாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது போல எந்தக் கலகத்தையும் எங்களுக்குள் ஏற்படுத்திவிட முடியாது. தொகுதிகள் என்பது திமுக தலைவர் முடிவெடுக்க வேண்டியது. காங்கிரஸ் தலைமையிடம் கலந்து முடிவெடுக்கப்படும்.
தேர்தலுக்கு வெகு நாட்கள் முன்பாகவே பிரச்சாரத்தைத் தொடங்குவதால் மக்கள் மனதில் நிச்சயமாகப் பதியும். தேர்தல் நேரத்தில் செல்லாமல் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். முன்னதாகவே 15 ஆயிரம் கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தியதன் விளைவு, மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி கிடைத்தது.” இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.