அதிகரித்த கொரோனா தொற்று… கடும் கட்டுபாடுகளுடன் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு!!

ஆமதாபாத் நகரில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், அந்நகரில் மட்டும் 57 மணிநேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, ”குஜராத்தின் வணிக மையமான ஆமதாபாத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை முதல் வார இறுதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆமதாபாத் நகரில் மட்டும் வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
முழு ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆமதாபாத்தில் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் இயக்கப்பட்டு வந்த 600 பேருந்துகளும் இயக்கப்படாது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.