காஸா பிஞ்சுக்குழந்தைகளின் மன ரணத்தைக் குணமாக்கும் கலை சிருஷ்டிகள்!

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகால கொடூரமானப் போருக்குப் பிறகு, காஸா பகுதி முழுவதும் வாழும் பெரும்பாலானக் குழந்தைகளின் மனங்களை அச்சமும் தீவிர மனப்பதற்றமும் (Fear and anxiety) மொத்தமாகக் கவ்விப் பிடித்துள்ளன. காஸாவில், இப்போதையக் குழந்தைப்பருவம் என்பது முன்னெப்போதையும் விட கொடூரமாகவும் அழுத்தமாகவும் மாறியுள்ளது. அன்றாட வாழ்க்கையின் அடிப்படைக் கட்டமைப்பில் ஏதோ ஒன்று முற்றிலும் உடைந்து சிதறிவிட்டது; தங்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கும் அப்பாற்பட்ட வேகத்தில் தலைகீழாக மாறிவரும் இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் பிஞ்சுக் குழந்தைகள் திணறி வருகிறார்கள். தற்காலிகப் பள்ளிகள், அகதிகள் முகாம்கள் மற்றும் நெரிசல் மிகுந்த கூடாரங்களுக்குள் கழியும் இந்த குழந்தைகளின் உலகத்தை விளக்க அவர்களிடம் எந்த வார்த்தைகளும் இல்லை.

இந்த மாபெரும் சூன்யத்திற்குள் (Void), தங்களின் இழந்த குழந்தைப்பருவத்தை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்தோடு சில உள்ளூர் கலைஞர்கள் (Artists) இப்போது அதிரடியாகக் களமிறங்கியுள்ளனர். ஓவியம் வரைதல், நடனம், கூட்டுப் பாடல்கள் மற்றும் ஒலிகளை உருவாக்குவதன் மூலம், போரினால் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளுக்குத் தங்களின் சுய உணர்வுகளை மீண்டும் வெளிப்படுத்தும் அசாத்தியத் திறனை அவர்கள் மெல்லக் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். இத்தகையக் “கலை வழிச் சிகிச்சை” (Art Therapy) முறையானது, எஞ்சியிருக்கும் அவர்களின் குழந்தைப்பருவத்திற்குத் தங்களின் கதைகள், பாடல்கள் அல்லது வண்ணங்களின் வழியாகச் சற்றே நிம்மதியாக சுவாசிப்பதற்கான ஒரு சிறு வாய்ப்பை அள்ளிக் கொடுக்கிறது.

அல்-மஜல்லா இதழானது, காஸா மண்ணில் உறைந்து கிடக்கும் குழந்தைகளுக்குத் தங்களின் கலை மூலம் உளவியல் ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கி வரும் மூன்று முக்கியக் கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களின் நேரடிக் கள அனுபவங்களைச் சேகரித்தது. இவர்களின் பணியில் கலையும் மருத்துவச் சிகிச்சையும் (Art and therapy) ஒன்றாக இணைகின்றன; இழப்புகளும் பேரழிவுகளும் சூழ்ந்துள்ள ஒரு கொடூரமான எதார்த்தத்திற்கு நடுவே, குழந்தைகளின் சிதைந்த உள்மனக் கட்டமைப்பை தற்காலிகமாகவாவது மீண்டும் கட்டி எழுப்புவதற்கான ஒரு மிக முக்கிய ஆயுதமாக இந்தக் படைப்பாற்றல் (Creativity) மாறுகிறது.

காலணிகளை கழற்றாமல் தூங்கும் குழந்தைகள்!

கதைசொல்லியான இதிகாஸ் அல்-உபைத் (Itizaz al-Ubaid) என்பவரின் பணி, குழந்தைகளுக்கு ஏற்பட்ட அந்தப் போர்க்காலக் கொடூர நினைவுகளின் நேரடிப் பிடியிலிருந்து அவர்களின் மனதை மெல்ல விடுவிப்பதாகும்; இதற்காக அவர் தங்களின் கதைகளை ஒரு குறியீட்டுப் பாலமாகப் (Symbolic passageway) பயன்படுத்துகிறார். அவர் தனது கதைகளைப் போரிலிருந்து தொடங்குவதும் இல்லை, போரோடு முடிப்பதும் இல்லை. அதற்குப் பதிலாக, இயற்கையின் கூறுகள், வண்ணங்கள் மற்றும் கற்பனை உலகத்தை (Nature, colour, and imagination) முன்வைத்து, முதலில் குழந்தைகளின் மனதில் ஒரு அசாத்தியமான உளவியல் பாதுகாப்பு உணர்வை (Psychological safety) உருவாக்குகிறார்.

கூடாரங்களுக்கும் இடம்பெயர்ப்பு முகாம்களுக்கும் இடையே, ஒரு கதை சொல்லி தன் இனிமையான குரலால் குழந்தைகளின் உள்ளங்களில் கனவுகளை விதைக்கிறார். போரின் நிழலில் கூட, குழந்தைகள் சிறிது நேரம் கதைகளின் உலகில் மூழ்கி மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தேடுகின்றனர்.

“குழந்தைகளுக்குப் பாசத்தையும் அசாத்தியக் கற்பனையையும் தரும் எளிய விஷயங்களிலிருந்துதான் நான் எனது கதைகளைத் தொடங்குகிறேன்; அவர்களின் மனதில் ஒரு பாதுகாப்பான கற்பனை உலகம் உருவான பிறகுதான், அவர்களைத் தங்களின் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்த அனுமதிக்கிறேன்” என்று அல்-உபைத் விளக்குகிறார். “அவர்களின் கதைகளில் போர் என்பது, நடுவே வரும் டஜன் கணக்கான அழகானப் பிம்பங்களுக்கு நடுவே இருக்கும் ஒரே ஒரு அசிங்கமான பிம்பமாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறது. இதன் மூலம், அந்தக் குழந்தையை என்னால் கலையின் பாதுகாப்பான வளையத்திற்குள் மிக எளிதாக அழைத்து வர முடிகிறது” என்கிறார்.

இந்தச் சூழலில், குழந்தைகள் தங்களுக்கு நடந்தக் கொடூரங்களை நேரடியாக விவரிக்கும்படி ஒருபோதும் வற்புறுத்தப்படுவதில்லை. மாறாக, போரை விடுத்து வாழ்க்கையை நோக்கிச் சுட்டிக்காட்டும் எளியப் பொருட்களுக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம், அவர்கள் மெல்லக் குறியீட்டு எழுத்து முறைக்கு (Symbolic writing) வழிகாட்டப்படுகிறார்கள். “இது அவர்களின் மனதில் உறைந்து கிடக்கும் ரணங்களை மீண்டும் கொடூரமாகக் கிளறாமல் (Trauma reactivation), தங்களின் உணர்வுகளை மென்மையாக வெளியில் கொண்டுவர உதவுகிறது” என்று அல்-உபைத் கூறுகிறார். மேலும் அவர் ஒரு கசப்பான உண்மத்தைப் பகிர்ந்து கொள்கிறார்: “இந்தக் குழந்தைகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்களின் காலணிகளைக் (Shoes) கழற்றாமலேயேதான் இரவில் தூங்குகிறார்கள்; ஏனெனில், எப்போது வேண்டுமானாலும் குண்டுகள் விழலாம், அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கலாம் என்ற ஆபத்தான எதார்த்தத்திற்கு அவர்கள் பழகிப்போய்விட்டார்கள்”.

ட்ரோன் சத்தத்தை மிஞ்சும் குழந்தைகளின் பாடல்கள்!

கலையின் கருவிகள் என்பது குழந்தைகளின் மனதில் உலகத்தின் மீது ஏற்பட்டுள்ள பயத்தையும் தீவிர அவநம்பிக்கையையும் உடைத்தெறியும் ஒரு உன்னத வடிகாலாகும். ஆனால், அல்-உபைத்தைப் பொறுத்தவரை, ஒரு வெறும் கதையால் மட்டும் போரின் நிஜ வலியை முற்றிலும் அழித்துவிட முடியாது; அது சிதைந்த நினைவுகளைச் சீரமைக்கும் ஒரு தற்காப்பு உத்தி, அவ்வளவுதான். இதன் மூலம் ஒரு குழந்தை தனக்கு ஏற்பட்டக் கொடூர நினைவுகளுக்கு எவ்வளவு அருகில் செல்ல வேண்டும், அல்லது எவ்வளவு தூரம் விலகி நிற்க வேண்டும் என்பதைத் தானேத் தீர்மானிக்கும் அசாத்தியக் கட்டுப்பாட்டைப் பெறுகிறது.

ஜெய்தூன் பகுதியைச் சேர்ந்த 32 வயது ரூலா தலூல் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கு இசையும் பாட்டும் கற்றுக்கொடுக்கிறார். கடினமான சூழலிலும் குழந்தைகளின் இதயங்களில் மகிழ்ச்சியின் சிறு விதைகளை விதைக்கும் இந்த மென்மையான முயற்சி

மறுபுறம், காஸாவைச் சேர்ந்தப் பாடகர் அகமது அபு அம்ஷா (Ahmad Abu Amsha), இசையின் மூலம் குழந்தைகளின் தனிமையையும் மௌனத்தையும் உடைத்து, அவர்களை மீண்டும் சமூகத்தோடு இணைக்கும் (Social integration) வித்தையைக் கையாளுகிறார். கூட்டுப் பாடல்கள், இசைக் கருவிகளை வாசித்தல் மற்றும் எளியப் பொருட்களைக் கொண்டு தங்களுக்குத் தேவையானக் கருவிகளைத் தாங்களே உருவாக்குவதன் மூலம், குழந்தைகளுக்கு இது ஒரு அசாத்தியமான உளவியல் மீட்சியைத் தரும் என்று அவர் நம்புகிறார். இவர்களின் பயிற்சி, முதலில் குழந்தை அமைதியாகக் கேட்பதிலிருந்து (Silence listening) தொடங்கி, இறுதியில் அனைவரும் ஒன்றாகப் பாடும் கூட்டுப் பங்களிப்பில் முடிகிறது. இந்த கூட்டுப் பங்களிப்பு ஒருபோதும் ஆரம்பத்திலேயேக் குழந்தைகள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதில்லை; பங்கேற்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் முழுச் சுதந்திரமும் அந்தக் குழந்தைக்கே உண்டு.

“ஆரம்பத்தில், பல குழந்தைகள் இதில் பங்கேற்கவே இல்லை. அவர்கள் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். அதன் பிறகு, ஒவ்வொரு அடியாக முன்னேறி, மெல்லப் பாடத் தொடங்கி, இறுதியில் அந்தப் பெரியக் குழுவின் ஒரு அங்கமாகவே மாறிப்போனார்கள்” என்று அபு அம்ஷா கூறுகிறார். இந்த நிதானமான நகர்வு, குழந்தைகளின் உளவியல் ரணங்களின் தன்மையை ஆழமாகப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடாகும். “அவர்களின் மௌனம் என்பது மறுப்பு அல்ல; மாறாக அது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் எடுக்கும் முதல் தற்காப்பு நிலை”. தன் வீட்டிற்கு அருகில் விழுந்த இஸ்ரேலிய ஏவுகணையின் அதிர்ச்சியிலும், அதன் கொடூரப் புகையிலும் சிக்கித் தனது உள்குரலையே இழந்த ஒரு சிறுவன், தற்போதையக் கலையின் மூலம் மீண்டும் தனது சொந்தக் குரலை மீட்டெடுத்துள்ளான்.

கான் யூனிஸின் அல்-கராரா முகாமில், மயாசெம் கலாச்சார சங்கத்தின் முயற்சியாலும் யுனிசெஃப் ஆதரவாலும் அமைக்கப்பட்ட பள்ளியில் 1500 மாணவர்கள் அடிப்படைக் கல்வியுடன் ஓவியம், இசை, பாரம்பரிய தத்ரீஸ் எம்ப்ராய்டரி போன்ற கலைகளைக் கற்றுத் தங்கள் பாலஸ்தீன மரபை வாழ வைக்கின்றனர்.

நரக முகாமில் ஆறுதலாய் ஒலிக்கும் தெய்வீகப் பாடல்கள்!

இந்தப் போர்க்கால இசைப் பணிக்கு ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்புகளும் சந்தேகங்களும் கிளம்பின. “நான் முதன்முதலில் அகதிகள் முகாம்களுக்குள் நுழைந்தபோது, அங்கிருந்தப் பெற்றோர்கள் அனைவரும் ஒற்றைக் குரலில் என்னைத் தடுத்தார்கள்: ‘இது என்ன பாட்டு வேண்டிக்கிடக்கிறது? எங்களுக்கு முதலில் அன்றாட ரொட்டித் துண்டுக்கு (Daily bread) வழி சொல்லுங்கள். இசை ஒருவனுக்கும் சோறு போடாது’ என்று கத்தினார்கள். நான் அவர்களிடம், ‘இசை இந்த நரக முகாமிற்குள் ஒரு மாபெரும் மாற்றத்தை உண்டாக்கும், என்னை மட்டும் கொஞ்சம் வேலை செய்ய விடுங்கள்’ என்று கெஞ்சினேன்” என்கிறார் அபு அம்ஷா.

காலப்போக்கில், அதே குடும்பங்கள் முகாம்களுக்குள் நடக்கும் இசை ஒத்திகைகளில் தங்களின் குழந்தைகளோடு ஆர்வமாகப் பங்கேற்கத் தொடங்கின. தனது கூட்டுப் பயிற்சிகளில் தாளங்களை உருவாக்குதல், கூட்டுப் பாடல்கள் மற்றும் உத், கிதார், மேளங்கள் (Oud, guitar, and drum) போன்ற பாரம்பரியக் கருவிகளை அவர் பயன்படுத்தினார். “என் ஒற்றை இலக்கு, அந்தக் குழந்தையின் பிஞ்சு மூளை போரைத் தவிர வேறு எதையாவது யோசிக்க வேண்டும் என்பது மட்டும்தான். நான் அவர்களின் மூளையைத் திறந்து அதற்குள் இசையை வாரி நிரப்பினேன்” என்கிறார்.

தனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு வரலாற்றுத் தருணத்தையும் அவர் இங்கேப் பகிர்ந்துகொள்கிறார்:

“ஒரு கட்டத்தில், இஸ்ரேலிய உளவு விமானங்களின் (Reconnaissance aircraft) சத்தம் காதைக் கிழிக்கும் அளவுக்குக் கொடூரமாக இருந்ததால், எங்களால் இசைப் பயிற்சியைத் தொடர முடியவில்லை. ஆனால், நாங்கள் அந்த ட்ரோன்களின் மரண இரைச்சல் சத்தத்தையே தங்களின் பாடலுக்குப் பின்பாட்டாக (Background music) மாற்றிக்கொண்டு, தங்களின் குரலை இன்னும் பலமாக உயர்த்திப் பாடத் தொடங்கினோம்; நாங்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தோம், போரை அல்ல!” என்று வீரத்தோடு முழங்குகிறார். காஸாவில் நிலவும் கடுமையானப் பற்றாக்குறை காரணமாக, குழந்தைகளும் பெற்றோர்களும் சேர்ந்து பிளாஸ்டிக் குழாய்கள் (Plastic pipes) மற்றும் புல் தட்டுகளை வைத்தே அசாத்தியமான இசைக் கருவிகளைத் தாங்களே உற்பத்தி செய்து பல்லிளிக்கும் தடைகளைத் தகர்த்துள்ளனர்.

மூன்றாவது நிபுணரான, காட்சி ஓவியக் கலைஞர் மராம் சக்ர் (Maram Saqr) முற்றிலும் வேறுபட்ட ஒரு தத்துவத்தைக் கையாளுகிறார். அவரைப் பொறுத்தவரை, ஓவியம் வரைதல் என்பது வெறும் குழந்தையின் மனநிலையை மேலோட்டமாகச் சந்தோஷப்படுத்துவதற்கானக் கருவி அல்ல; மாறாக, குழந்தையின் உள்மனதில் உறைந்து கிடக்கும் அந்தப் பேரழிவின் சாட்சியங்களை (Documentation) அப்படியே வெளியில் கொண்டுவந்து காகிதத்தில் கொட்டும் ஒரு அசாத்திய ஆயுதமாகும். இவர்களின் ஓவியங்களில் அழகியல் முக்கியமல்ல, அதன் பின்னால் இருக்கும் வெளிப்பாடே (Expression) முதன்மையானது.

தனது கண் முன்னால் நடந்த இஸ்ரேலியப் படைத் தாக்குதலில் தனது உயிருக்குயிரான உறவினரை இழந்த ஒரு சிறுவன், அதிர்ச்சியில் தனது கண்களை மூடிக் கொண்டான்; அதன் பிறகு மீண்டும் தன் கண்களைத் திறக்கவே அவன் நடுங்கினான். மற்றொரு சிறுவனோ, இஸ்ரேலியப் படைகள் தன் கண் முன்னே செய்தக் கொடூரமானக் குற்றத்தைக் கண்டு, அதிர்ச்சியில் தனது கண்களை அகல விரித்தபடியே உறைந்து நின்றான். “எங்கள் இலக்கு, அந்தக் குழந்தை தனக்குள் பூட்டி வைத்துள்ளப் பேரழிவின் நினைவுகளைக் காகிதத்தில் வண்ணங்களாகக் கொட்ட வேண்டும் என்பது மட்டும்தான்; அதற்காக அவர்கள் மகிழ்ச்சியான வண்ணங்களை (Colours of joy) மட்டுமே வரைய வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை” என்று சக்ர் கூறுகிறார்.

“தன் உள்மன உணர்வுகளைக் காகிதத்தில் வண்ணங்களாகப் பார்க்கும்போது, அது ஒரு சுய-குணப்படுத்தும் பயணமாக (Self-healing journey) மாறுகிறது. அந்தக் குழந்தைகளின் ஓவியங்களில் சிதைந்த கோடுகள், அடர்த்தியான இருண்ட நிறங்கள், தரைமட்டமாக்கப்பட்டத் தங்களின் வீடுகளின் நேரடிக் குறியீடுகள் மற்றும் இழப்புகளின் காட்சிகள் அப்பட்டமாகத் தோன்றும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவர்களின் உள்மனக் கொதிப்பை, அவர்கள் வரைந்து தீர்க்கிறார்கள்” என்கிறார். களிமண் (Clay) மற்றும் மாடலிங் பேஸ்ட்டுகளைக் கைகளால் தொட்டுச் செய்வதன் மூலம், தொடுதல் உணர்வும் (Touch) இந்த மருத்துவச் சிகிச்சையின் ஒரு முக்கிய அங்கமாக மாறுகிறது.

நெரிசல் மிகுந்தக் கூடார வாழ்க்கை காஸா குழந்தைகளின் தனிநபர் உரிமைகளை (Privacy) முற்றிலும் பறித்துவிட்டது என்பதுதான் எதார்த்தம். ஆனால், அவர்களுக்கு ஓவியம் வரைவதற்கான ஒரு ஒற்றைச் சொந்த இடத்தை அள்ளிக் கொடுக்கும்போது, அது அவர்களுக்கு ஒரு அசாத்தியமானத் தன்னாட்சியையும் பாதுகாப்பு உணர்வையும் (Autonomy and safety) மீண்டும் தருகிறது. “அந்தக் குழந்தை தனது ஓவியங்களிலும் வண்ணங்களிலும் எவ்வளவு ஆழமாக மூழ்கிவிடுகிறது என்றால், தான் இருப்பது ஒரு நரகக் கூடாரம் என்பதை அது ஒற்றை நொடியில் மறந்துவிடுகிறது; முகாம்களின் இரைச்சலோ, மனிதர்களின் அலறல் சத்தங்களோ அதன் காதுகளில் விழுவதே இல்லை. அந்த ஓவியக் காகிதம் மட்டுமே அதன் புதிய உலகமாக மாறுகிறது. இதுதான் வரைதல் மூலம் சாத்தியமாகும் உன்னத உளவியல் சிகிச்சை” என்கிறார் சக்ர்.

கட்டுப்பாடுகளுக்கு நடுவே, மராம் சக்ர் பனை ஓலைகள், பிளாஸ்டிக் பைகள், பாட்டில் மூடிகள் மற்றும் கடற்கரைச் சிப்பிகளை (Seashells) வைத்தே குழந்தைகளை அசாத்தியமான ஓவியங்களையும் கொலாஜ்களையும் (Collage) செய்ய வைத்துள்ளார். “யுத்த காலத்திலும் எளியப் பொருட்களைக் கொண்டு கலை பிறக்கும் என்பதை இந்தக் குழந்தைகள் உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளனர்” என்று பெருமிதப்படுகிறார்.

அல்-ஸவாயிதாவின் கலை ஸ்டுடியோவில், பறவைகளின் மென்மையான குரல்களும் செல்லப் பிராணிகளின் அன்பும் சேர்ந்து, போரால் காயப்பட்ட குழந்தைகளின் உள்ளத்தை மெல்ல மெல்ல குணப்படுத்துகின்றன.

பள்ளி வகுப்பறை மேசைகளை தேடும் பிஞ்சுகள்!

இந்த மூன்று வேறுபட்டக் கலைக் கள அனுபவங்களும் ஒரு புள்ளியில் மிக நேர்த்தியாக இணைகின்றன: அதாவது, காஸா குழந்தை என்பது வெறும் மௌனமாக அழும் ஒரு பாசிவ் இனம் அல்ல; மாறாக அது தங்களின் சொந்த வாழ்வின் அர்த்தங்களை உலகிற்கு உணர்த்தும் ஒரு உன்னதப் படைப்பாளி. இதிகாஸ் அல்-உபைத் குறியீடுகள் மற்றும் மொழியை நம்பியிருக்கிறார்; அபு அம்ஷா கூட்டு ஒலிகளையும் பாடல்களையும் கையாளுறார்; மராம் சக்ர் காட்சிப் பொருட்களையும் தொடுதல் உணர்வையும் தன் ஆயுதமாக மாற்றியுள்ளார்.

கூடாரங்களின் இரைச்சல்களுக்கு நடுவேயும் இந்த கலை வேலைகள் என்பது, ஒரு மாபெரும் புதிய உலகத்தையே சிருஷ்டிக்கிறது. “ஒரு குழந்தை தனது அசாத்தியக் கற்பனைத் திறனை விழித்தெழச் செய்யப் பழகிவிட்டால், அதுவே அதன் வாழ்வின் ஆகப்பெரும் புகலிடமாக (Refuge) மாறிவிடுகிறது. தற்போதைய நரக எதார்த்தத்தால் தராத அந்தப் பாதுகாப்பு வளையத்தை, இந்தக் கலை அந்தக் குழந்தைகளுக்கு அள்ளிக் கொடுக்கிறது” என்கிறார் சக்ர்.

“எங்களை ஆகப்பெரிய அளவில் அச்சுறுத்துவது எதுவென்றால், குழந்தைகளின் பிஞ்சு மனதிற்குள் எரிமலைப் போலக் குவிந்து கிடக்கும் அந்தத் தீவிரமான மன ஒடுக்குமுறையும், அழுத்தமும்தான் (Repression and pressure). இந்தக் கலை மற்றும் கதைசொல்லல் மூலமாக, நாங்கள் அவர்களின் மீட்சிக்கான ஒரு உன்னதப் பாதையை மீண்டும் திறந்து வைக்கிறோம்” என்று அல்-உபைத் நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

பிரளயத்திற்கு நடுவேயும் பாலஸ்தீனக் குழந்தைகள் தங்களின் வாழ்வின் அர்த்தங்களை விடாப்பிடியாகக் கட்டமைத்து வருகிறார்கள். தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களுக்கு ஒரு ஒற்றைச் சிறிய இடம் கிடைப்பது கூட அவர்களுக்குப் பல்லாயிரம் கோடிப் பலனைத் தரும். இருப்பினும், இறுதிப் புள்ளி ஒன்றுதான்: இந்தக் குழந்தைகளுக்கு வெறும் கதைகளும், பாடல்களும், ஓவியக் காகிதங்களும் மட்டுமே முழுமையான வாழ்க்கையாக மாறிவிட முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலியப் போரினால் பறிக்கப்பட்டத் தங்களின் சொந்தப் பள்ளி வகுப்பறைகளுக்கும் மேசைகளுக்கும் அவர்கள் உடனடியாகத் திரும்ப வேண்டும்; அது மட்டும்தான் இந்த பிஞ்சு நெஞ்சங்களின் வடுக்களை நிரந்தரமாகக் குணமாக்கும்.

 நன்றி: இக்கட்டுரையின் மூல வடிவம் 'அல்-மஜல்லா' (Al Majalla) சர்வதேச ஊடகத்தில்,  பாலஸ்தீனிய கவிஞரும் எழுத்தாளரும் ஹூசாம் மாரூஃப் அவர்களால் எழுதப்பட்டது. சர்வதேச அரசியலின் அசல் வியூகங்களை எங்களின் தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க அனுமதித்த மூலக் கட்டுரையின் ஆசிரியருக்கும், அந்த நிறுவனத்திற்கும் எங்களின் நன்றிகள் உரித்தாகுக.
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x