தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு!!

ஊட்டியில் காதலன் வருவதாக கூறி தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் சென்னையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். காதலனுக்காக காத்திருந்த அப்பெண், மணமகன் தாலி கட்டும் நேரத்தில், தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அவரை தடுத்து நிறுத்தினார். திருமணத்தை நிறுத்தியதை கண்டு, பெற்றோரும் , சுற்றத்தாரும் எதிர்த்தாலும் இன்னும் சிறிது நேரத்தில் தனது சென்னை காதலன் வந்து விடுவதாக கூறினார்.
திருமணத்திற்கு முன்பாக தான் அங்கு வந்து விடுவதாக கூறிய காதலன் வெகுநேரமாகியும் வரவில்லை. ஆனால் நாள்முழுவதும் காத்திருந்த மணப்பெண் பிரியதர்ஷினிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. திருமணம் நின்ற அவமானத்தில் பிரியதர்ஷினியின் பெற்றோர் அவரை லவ்டேல் என்ற பகுதியில் விட்டு சென்று, வீட்டிற்கு வரக்கூடாது என எச்சரித்துள்ளனர். இருப்பினும் தனது காதலனை தேடி சென்று அவரை திருமணம் செய்யப்போவதாக அந்த பெண் சென்னைக்கு புறப்பட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.