பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு 2-ம் நாள் கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நிவர் புயல் காரணமாக கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கியது. முதலில் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக விளையாட்டுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதையடுத்து, மருத்துவப்படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாளையும் பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இன்று “நிவர்” என்ற புயலாக மாறி நாளை காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிவர் புயர் காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த பொதுப்பிரிவினருக்கான 2-ம் நாள் மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள மருத்துவ கலந்தாய்வு வரும் 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், மருத்துவ கலந்தாய்வு 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மருத்துவ கலந்தாய்வுக்காக வந்துள்ளர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
