‘ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது’ புதுவை முதலமைச்சர் திட்டவட்டம்

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்த புதுச்சேரி சுகாதாரத் துறை முடிவு செய்திருந்தது.
ஆனால், வரும் ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் அன்றைய தினம் நிறைய பல சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு திட்டம் என்ற செய்தியால், சுப நிகழ்ச்சிகள் நடத்த உள்ளவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த முடிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: “கடைகளை மூடுவதால் மட்டுமே, கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள். அதன் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கை கடைப்பிடிக்கும் வழக்கம் ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரியில் முகூர்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை திருமணம், சுபநிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதால் முழுஊரடங்கு இருக்காது. ” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.