இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸுக்கு சீனாவில் சிலை!!

இரண்டாம் உலகப் போரின்போது சீனாவில் மருத்துவ சேவையாற்றிய இந்திய மருத்துவருக்கு அந்நாட்டில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் துவாரகநாத் கோட்னிஸ். மருத்துவர். இரண்டாம் உலகப் போரின்போது சீனாவில் சேவை செய்வதற்காக அப்போதைய காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தால் 1938-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 5 பேர் குழுவில் துவாரகநாத்தும் இடம்பெற்றிருந்தார்.

சீனத் தலைவர் மாசே துங் தோற்றுவித்து தலைமை தாங்கி நடத்திய சீனப் புரட்சியின்போது துவாரகநாத் கோட்னிஸ் ஆற்றிய மருத்துவ சேவைகள், அந்நாட்டு மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றன. பின்னர் சீனப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட கோட்னிஸ், அங்கேயே தங்கிவிட்டார். 1942 -இல் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டில் தனது 32-ஆவது வயதில் அவர் மரணமடைந்தார்.

அவரின் மருத்துவ சேவையைப் பாராட்டும் விதமாக அவருக்கு சிலையை நிறுவியுள்ளது அந்நாட்டு அரசு. இது குறித்து சீன அரசின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், “சீனப் புரட்சியின்போது மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி பெரும் பாராட்டுதல்களைப் பெற்றார் துவாரகநாத் கோட்னிஸ். கடினமான நாள்களில் அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவுகூரத்தக்கது. அவர் மரணமடைந்தபோது தலைவர் மா சே துங் மிகவும் வருத்தமடைந்தார். சீனர்களுக்கு உதவும் கரமாகச் செயல்பட்ட ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம் என்று இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டிருந்தார்.” என்று தெரிவுத்துள்ளது.

சீனர்களால் கீ துஹுவா என்று அன்புடன் அறியப்பட்டவர் துவாரகநாத் கோட்னிஸ். அவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், ஹுபே மாகாணத் தலைநகரான ஷிஜியாஸுவாங்கில் அவரின் பெயரிலுள்ள மருத்துவப் பள்ளியில் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலை திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதுபோல சீனாவில் மேலும் சில நகரங்களில் துவாரகநாத்துக்கு சிலைகள் மற்றும் நினைவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x