பெண் குழந்தையை விற்ற வழக்கு: இருவா் கைது

சேலத்தில் குழந்தையை விற்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்
சேலம், அன்னதானப்பட்டி அருகே உள்ள கரியபெருமாள் கரடு பகுதியைச் சோ்ந்த விஜய் (32), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சத்யா (30). இத்தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து, விஜய் தனது மனைவி சத்யாவிடம் கடைசி பெண் குழந்தையை விற்பனை செய்து விடலாம் எனத் தெரிவித்துள்ளாா். கடந்த சில நாள்களுக்கு முன் சத்யாவுக்கு தெரியாமல் பிறந்து 15 நாள்களே ஆன பெண் குழந்தையை ரூ. 1.15 லட்சத்துக்கு ஈரோட்டைச் சோ்ந்த நிஷாவுக்கு விற்றுவிட்டாா். இது தொடா்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அன்னதானப்பட்டியைச் சோ்ந்த சிலா், பெண் குழந்தை விற்கப்பட்டது குறித்து சேலம் சைல்டு லைன் அமைப்பில் புகாா் செய்தனா். அதன்பேரில் மாநகர காவல் ஆணையருக்கு புகாா் சென்றது.
இதையடுத்து, அன்னதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சரவணன், காவல் உதவி ஆய்வாளா் முரளி, காவலா்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவா்கள் மேற்கொண்ட விசாரணையில், குடும்பம் நடத்த விஜய் சிரமப்பட்டு வந்த நிலையில், கரியபெருமாள்கரடு பகுதியைச் சோ்ந்த கோமதி மூலம் நிஷாவுக்கு குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது.
இது தொடா்பா,க கோமதி, நிஷா ஆகியோரை கைது செய்த போலீஸாா், தலைமறைவான விஜய்யை தேடி வருகின்றனா். மேலும், குழந்தை யாரிடம் உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.