மீண்டும் வீட்டுக் காவலில் மெஹபூபா முப்தி!! செய்தியாளர்களை சந்திக்க விடாமல் தடுத்த போலீஸ்..

ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி, மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, கடந்தாண்டு மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்ற, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சமீபத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் வஹீத் பாரா, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பிடம் ஆதரவு கோரிய குற்றச்சாட்டில், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் குடும்பத்தினரை சந்திக்க, மெஹபூபா முப்தி திட்டமிட்டிருந்தார். அதற்கு, அனுமதி மறுக்கப்பட்டது.அதை மீறி, மெஹபூபா முப்தி, நேற்று செல்ல முயன்றதால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இது குறித்து விளக்க, நேற்று காலை செய்தியாளர்களுக்கு, மெஹபூபா முப்தி அழைப்பு விடுத்துஇருந்தார்.
அதன்படி வந்த செய்தியாளர்கள், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மெஹபூபாவின் மகள் இல்டிஜா முப்தியும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஜம்மு – காஷ்மீரில், முதன் முறையாக மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக் கான இடைத்தேர்தல் இன்று துவங்கி, எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.