கொரோனா பரிசோதனைக்கு மேலும் 16 லட்சம் கருவிகள் கொள்முதல்!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை வேகப்படுத்த கூடுதலாக 15.8 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளை கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 பேர் வீடு திரும்பியுள்ளனர். 58,207 பேர் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமையிலும் உள்ளனர்.
தினமும், 60 – 70 ஆயிரம் வரை, கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது வரை, 33.60 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா சோதனைக்காக, தமிழக அரசு தொடர்ந்து, ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகளை கொள்முதல் செய்து வருகிறது.
ஏற்கனவே தென் கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் என மொத்தம் 10 லட்சம் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூடுதலாக, 15.80 லட்சம் கருவிகளை கொள்முதல் செய்ய, தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இவை 3 வாரங்களில் தமிழகம் வரும்.