பழங்குடியின மாணவிக்கு வீடு கட்ட உதவிய நடிகர் சோனு சூட்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் வீடு மற்றும் புத்தகத்தை இழந்த பழங்குடியின மாணவிக்கு, புதிதாக வீடு கட்ட, புத்தகங்கள் வாங்க நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.

தமிழ் திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் சோனு சூட். தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். ஊரடங்கு போடப்பட்டதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ ஆரம்பித்தார். தற்போது தினசரி நாட்டின் பல மூலைகளிலிருந்தும் பல்வேறு உதவிகள் கேட்டு இவருக்கு விண்ணப்பங்கள் வருகின்றன. முடிந்தவரை அவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்வதாக சோனு சூட் கூறியுள்ளார். இன்று மட்டும் சுமார் 32 ஆயிரம் பேர் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், மெயில் மூலமும் உதவி கேட்டிருப்பதாக டுவிட்டரில் பதவிட்டுள்ளார்.

சமீபத்தில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம், பஸ்தார் பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அஞ்சலி குடியம் என்ற பழங்குடியின மாணவி வீடு மற்றும் புத்தகங்களை இழந்தார். வெள்ளம் அடித்துச் சென்றது போக மீதமுள்ள புத்தகங்களை அவர் அழுதுகொண்டே சேகரிக்கும் வீடியோ டுவிட்டரில் பத்திரிகையாளர் ஒருவரால் பகிரப்பட்டது. சோனு சூட் அந்த வீடியோவிற்கு, ‘கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள் சகோதரி. வீடும், புத்தகமும் புதிதாக இருக்கும்’ என பதிலளித்தார்.

அதன் பின்னர் இவ்விஷயம் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கவனத்திற்கு சென்றது. அவர் அதிகாரிகளிடம் அச்சிறுமிக்கு உதவும்படி உத்தரவிட்டார். புதனன்று மாவட்ட ஆட்சியர் ரித்தேஷ் அகர்வால் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ., விக்ரம் மாண்டவி, ரூ.1.1 லட்சத்துக்கான காசோலையை வீடு கட்டிக்கொள்வதற்காக சிறுமியிடம் வழங்கினர். மேலும் அவரது நர்ஸிங் நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்களையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கியுள்ளனர். மாணவி தந்தை விவசாயியாக உள்ளார். அவரது பயிர்களும் கடும் மழையால் நாசமாகியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x