பிறப்பு எண்ணிக்கையில் இத்தாலியின் மோசமான சாதனை!

2019 ஆம் ஆண்டில் இத்தாலியில் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை குறைந்து, மோசமான சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் பொருளாதாரம், கடுமையான தேக்கநிலையில் உள்ளது. இதற்கு காரணமாக, குறைந்துவரும் மக்கள் தொகையையும், வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பையும் பொருளாதார வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது.
இதுதொடர்பாக, வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2019இல், இத்தாலியில் நடந்த பிறப்பு எண்ணிக்கை 4.2 லட்சமாக குறைந்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டில் நடந்த பிறப்பு எண்ணிக்கையை விட 19 ஆயிரம் குறைவாகும்.
ஆனால், இறப்பு எண்ணிக்கை, 6.3 லட்சமாக கூடியுள்ளது. 1861ஆம் ஆண்டிலிருந்து நிகழ்ந்த பிறப்பு-இறப்பு விகித எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், 2019ஆம் ஆண்டுதான் இருப்பதிலேயே மிக மோசமான வருடமாக கருதப்படுகிறது.
மேலும் 2014 முதல் இத்தாலியிலிருந்து வெளியேறி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது. இப்படியாக, 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்கு சென்றுவிடடனர்.
இத்தாலியின் பொருளாதாரம், கடந்த 20 ஆண்டுகளில் மிக குறைவான அளவே வளர்ந்துள்ளது. வயதானோருக்கான பராமரிப்பு செலவு, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட சூழல்களால், இத்தாலியர்கள் குழந்தைகளைப் பெறுவதை தவிர்ப்பதுடன், வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் அவசரநிலை காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமை இந்த ஆண்டு மோசமடைந்துள்ளது, வெளிநாடுகளுக்குச் செல்லும் இத்தாலியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 8.1 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் புலம்பெயர்ந்தோரின் வருகையும் 8.6 சதவீதம் குறைந்துள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.