புதிய இந்தியாவின் அடையாளம் தோனி: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தனர். இந்நிலையில், தோனிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விபரம்:
தோனியின் ஓய்வு முடிவு 130 கோடி இந்திய மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. வெற்றியோ, தோல்வியோ எல்லா நேரங்களிலும் அமைதியை கடைபிடித்து சிறந்து விளங்கியவர் தோனி. ராணுவத்தில் கவுரவப் பதவியில் பணியாற்றிய போது தோனி மகிழ்ச்சியாக இருந்ததார்.
சிறிய நகரத்தில் பிறந்து தேசத்தின் அடையாளமாக தோனி மாறினார். 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி. சிக்சர் விளாசி 2011 உலகக் கோப்பையை வென்று தந்த தருணம் எப்போதும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும். புதிய இந்தியாவின் அடையாளம் தோனி. இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் தோனி.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.