பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றம்!!

புரெவி புயலால் ராமேஸ்வரத்தில் சூறாவளியுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் பாம்பன் துறைமுகத்தில் 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்க கடலில் உருவான புரெவி புயல் டிச.,4ல் பாம்பன், கன்னியாகுமரி இடையே கரையை கடக்கிறது. தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல், மழையை எதிர்கொள்ள ராமநாதபுரம், நெல்லை, துாத்துக்குடி, தென்காசி மாவட்ட நிர்வாகங்கள், தேசிய பேரிடம் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியது. கடல் கொந்தளிப்பால் 6 முதல் 8 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தன. ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் மிதமான மழை பெய்தது.
பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பாம்பன் அருகே புயல் கரை கடப்பதால் பாம்பன், ராமேஸ்வரத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.